முகம் சிதைந்து பிணமாக கிடந்தவர் விவகாரத்தில் திருப்பம்: மதுரை வாலிபரை கொன்றது ஏன்? - சரண் அடைந்த 3 பேர் பரபரப்பு தகவல்
முகம் சிதைக்கப்பட்டு மதுரை வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் பரபரப்பு தகவலை போலீசிடம் தெரிவித்தனர்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பழையனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக மேலராங்கியம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது48), உதயகுமார் (26), கண்ணன் என்ற மாயக்கண்ணன் (21) ஆகியோர் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலர் பல்லாக்கு என்பவரிடம் சரணடைந்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, கொலையானவர் மதுரை குலமங்கலம் அருகே சிவகாடு பகுதியை சேர்ந்த சிவானந்தம் (23) என்பது தெரியவந்தது. மேலும் நாகராஜ், உதயகுமார், கண்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவானந்தம் முகத்தில் கல்லைபோட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் நாகராஜின் மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது மகன் ஆத்திரம் தாங்காமல் சகோதரியை காதல் திருமணம் செய்தவரின் உறவினரை வெட்டியுள்ளார். இதனால் தற்போது சிறையில் உள்ளார். இந்த சம்பவத்துக்கு பழிவாங்க வந்திருப்பதாக எண்ணி அந்த வாலிபரை சந்தேகப்பட்டு 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக போலீசாரிடம் பரபரப்பு தகவலை தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story