தேனியில், போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கையிடம் விசாரணை - பாலின சந்தேகத்தால் மருத்துவ பரிசோதனை நடந்தது
தேனியில் போலீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற திருநங்கையின் பாலினம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தேனி,
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்ந்த சம்பவம் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, குரூப்-2 தேர்வுகளிலும் முறைகேடு நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல், போலீஸ் பணிக்கான தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்துத்தேர்வில் ஏராளமானவர்கள் போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து தேர்வு எழுதியதாக தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சின்னமனூரை சேர்ந்த பொன்முத்து (வயது 34) என்பவர் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அவருடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது அவர் திருநங்கை என்பதும், அவர் தனது பெயரை சம்யுக்தா என்று மாற்றி உள்ளதும் தெரியவந்தது.
இதனால், அவருடைய பாலினத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அவருடைய கல்வி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
பின்னர், பாலினத்தை உறுதி செய்வதற்காக அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் திருநங்கை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையிலும் பாலின பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பொன்முத்து என்ற பெயரில் அவர் விண்ணப்பித்து உள்ளார். பின்னர் அவருடைய பெயரை சம்யுக்தா என்று மாற்றி உள்ளார். விண்ணப்பத்தில் திருநங்கை என்று தான் குறிப்பிட்டு உள்ளார். ஹால்டிக்கெட்டிலும் திருநங்கை என்று உள்ளது. சந்தேகத்தின் பேரில் இந்த விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது’ என்றார்.
Related Tags :
Next Story