சீட்டு விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு
ஆண்டிப்பட்டி அருகே சீட்டு விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தேனி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவபாண்டியும்(36) நண்பர்கள். இந்தநிலையில் சீட்டு விளையாடுவதில் ரஞ்சித்குமார், சிவபாண்டி ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி ஊரில் உள்ள முத்தாலம்மன் கோவில் அருகில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், ஊரில் உள்ள சுடுகாடு அருகில் நடந்து சென்ற ரஞ்சித்குமாரை, சிவபாண்டி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முதுகு மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வெள்ளைச்சாமி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு கூறினார்.
இதில் சிவபாண்டிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பின்னர், தண்டனை பெற்ற சிவபாண்டியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story