அமுல்யாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காஷ்மீர் விடுதலை பதாகையுடன் வந்த இளம்பெண் கைது இந்து அமைப்பினர் போலீஸ் நிலையம் முற்றுகை-பரபரப்பு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட அமுல்யாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காஷ்மீர் விடுதலை பதாகையுடன் வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன்தினம் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட அமுல்யா (வயது 19) என்பவரை தேசதுரோக வழக்கில் உப்பார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமுல்யாவுக்கு எதிராக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று இந்து அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல, பெங்களூரு டவுன்ஹால் முன்பாகவும் நேற்று காலையில் இந்து அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமுல்யாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் போராட்டம் நடந்த பகுதிக்கு ஒரு இளம்பெண் பதாகையுடன் வந்தார். அந்த பதாகையில் காஷ்மீர் விடுதலை, தலித் விடுதலை, முஸ்லிம் விடுதலை என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
போராட்டக்காரர்கள் தாக்க முயற்சி
இதை பார்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிா்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் அந்த இளம்பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த சிலர் கூறினார்கள். இதனால் அமுல்யாவுக்கு ஆதரவாக அந்த இளம்பெண் வந்திருக்கலாம் என்று போராட்டக்காரர்களும் நினைத்ததாக தெரிகிறது. உடனே ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இளம்பெண்ணை தாக்குவதற்கு முயன்றார்கள். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டனர்.
உடனடியாக அவர், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்திற்கு சென்று இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது பெங்களூரு மல்லேசுவரத்தை சேர்ந்த ஆருத்ரா (வயது 23) என்று தெரிந்தது. மேலும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவர், தனியார் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக வேலை செய்து வருவதும் தொியவந்தது.
போலீஸ் நிலையம் முற்றுகை
அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் எந்த விதமான கோஷமும் போடவில்லை என்பதும், காஷ்மீர், முஸ்லிம், தலித் விடுதலை என்ற பதாகையை மட்டும் வைத்து கொண்டு போராட்டத்திற்கு வந்ததும் தெரியவந்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட அமுல்யாவுக்கும், ஆருத்ராவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணத்திற்காக காஷ்மீர் விடுதலை என்று எழுதப்பட்ட பதாகையுடன் போராட்டம் நடந்த டவுன்ஹாலுக்கு வந்தார்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆருத்ரா கோஷமிட்டதாகவும், அவர் மீது தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தை இந்து அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் திடீரென்று முற்றுகையிட்டனர். அந்த அமைப்புகளை சேர்ந்த பெண்களும் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் போலீசார் சமாதானமாக பேசினார்கள். இதையடுத்து, அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோஷமிடவில்லை
இதுகுறித்து மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு நிருபர்களிடம் கூறுகையில், டவுன்ஹாலில் நடந்த போராட்டத்தின் போது காஷ்மீர் விடுதலை என்ற பதாகையுடன் தான் ஆருத்ரா என்ற இளம்பெண் வந்துள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த விதமான கோஷமும் போடவில்லை. இளம்பெண் மீது எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு தான் அவர் எதற்காக காஷ்மீர் விடுதலை என்ற பதாகையுடன் டவுன்ஹாலுக்கு வந்தார் என்பது தெரியவரும், என்றார்.
இந்த நிலையில், விசாரணைக்கு பின்பு ஆருத்ராவை எஸ்.ஜே.பார்க் போலீசார் கைது செய்தனர். அவர் மீது சட்டப்பிரிவு 153 (ஏ), 153(பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அமைதியை கெடுக்க முயற்சி, இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்க முயன்றதாக ஆருத்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் அடைப்பு
இதற்கிடையே, கைதான ஆருத்ராவை பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, ஆருத்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story