பாகிஸ்தான் ஆதரவு கோஷத்திற்கு குமாரசாமி கண்டனம் ‘நாட்டுக்கு மரியாதை செலுத்துவது நமது கடமை’
பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எழுப்பிய கோஷத்தை நான் கண்டிக்கிறேன். இதில் எங்கள் கட்சியை சேர்ந்த இம்ரான்பாஷா என்பவர் தான் அந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அமுல்யா லியோனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதும், அவர் ஓடிவந்து மைக்கை பறித்தார். அதனால் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடும் முயற்சி நடக்கவில்லை.
நமது நாட்டை யாராலும் சிதைக்க முடியாது. யாரோ ஒருவர் நாட்டுக்கு எதிராக கோஷமிட்டு விட்டால் என்ற காரணத்திற்காக ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் வேறு பக்கம் திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. நாடு தான் முக்கியம். இந்தியராக நமது நாட்டுக்கு மரியாதை செலுத்துவது நமது முக்கிய கடமை.
முதலில் நாம் இந்தியர் என்ற மனப்பான்மை இருந்தால் தான் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், பா.ஜனதா அரசின் தோல்விகள் மறைக்கப்படுகிறது. தேசபக்தி குறித்து பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், நமது தேசிய கொடியை பிடிக்கிறார்களே தவிர, பாகிஸ்தான் கொடியை அல்ல. சுதந்திர போராட்டத்தின்போது பறந்த கொடியை விட இப்போது நமது தேசிய கொடியை போராட்டத்தில் அதிகமாக பார்க்க முடிகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story