திண்டுக்கல்லில், கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி 4 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்
திண்டுக்கல்லில், கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 3 இடங்களில் ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இந்த வழியாக அடிக்கடி ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து சாலையை கடந்து செல்லும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து அந்த 3 ரெயில்வே கேட்டுகளையும் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் ரூ.65 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு, ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகள் நடந்தது. இதற்கிடையே அந்த சாலையில் உள்ள ரெயில்வே கேட்டுகள் அமைந்துள்ள இடங்களில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்துடன் நெடுஞ்சாலைத்துறை துறை சார்பில் அமைக்கப்படும் மேம்பாலம் இணைக்கப்பட்டுவிட்டால் கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிடும். ஆனால் மேம்பாலத்துக்கான நிலத்தை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மேம்பாலம் கட்டும்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சிலுவத்தூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே தூண்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மேம்பால பணிக்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இருந்தும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும். ஓராண்டுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story