ஜல்லிக்கட்டில் 452 காளைகள் சீறிப்பாய்ந்தன; அடக்க முயன்ற 12 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் 452 காளைகள் சீறிப்பாய்ந்தன; அடக்க முயன்ற 12 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2020 3:30 AM IST (Updated: 22 Feb 2020 7:27 PM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 452 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகளை அடக்க முயன்ற 12 பேர் காயமடைந்தனர்.

தா.பழூர், 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து மிக்கேல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடத்தப்பட்டது. இதற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி, கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ரத்னா முன்னிலை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி தலைமையில், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து தகுதியான காளைகளை மட்டுமே அனுமதித்தனர். தா.பழூர் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதித்து தகுதியானவர்களை மட்டுமே மாடுகளை பிடிக்க அனுமதித்தனர்.

காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த காளைகளும் அதை தொடர்ந்து திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, துவாக்குடி, பொன்மலை, மணப்பாறை, முசிறி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த காளைகள் அவிழ்த்துவிடப் பட்டன. இதில் மொத்தம் 452 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் சிக்கியது, சில காளைகள் வீரர்களை பந்தாடி விட்டு சென்றது.

தொடர்ந்து பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வெள்ளிக்காசுகள், ரொக்கப்பரிசுகள், சைக்கிள்கள், பாத்திரங்கள் உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்றபோது மாடு முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, துணை தலைவர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அசோகன், பபிதா, அடைக்கலமேரி, பூவாயி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் ராபர்ட் ஆரோக்கியராஜ், துணை தலைவர்கள் ஆரோக்கியசாமி, செபஸ்டியன், ஜேம்ஸ், ஆரோக்கியசாமி ஆகியோர் அடங்கிய கமிட்டியினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி அப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story