தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும்; தொல்.திருமாவளவன் பேட்டி


தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும்; தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 7:52 PM IST)
t-max-icont-min-icon

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.

திருச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டபோது பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உள்ளன. கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மாநிலங்களை பின்பற்றி தமிழக அரசும் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான கையேடும் வெளியிடப்பட்டு விட்டது. கணக்கெடுக்கும் பணி தொடங்கியதும் யாரை சந்தேகப்படுகிறார்களோ அவர்கள் மீது அதிகாரிகள் சந்தேக முத்திரை குத்த முடியும். அப்படி முத்திரை குத்தப்பட்டால் தீர்ப்பாயத்திற்கு சென்று தான் தீர்வு பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்தியா முழுவதும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும் 8 கோடி பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்படுவார்கள். இவர்களை அடைப்பதற்காக 26 ஆயிரத்து 658 திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.12 லட்சம் கோடி செலவாகும் என வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்தியாவில் ஒரு சிறுபான்மையினர் கூட பாதிக்கப்படமாட்டார்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். கூட்டணி தர்மத்திற்காக அவர் பாரதீய ஜனதாவுக்காக இப்படி வக்காலத்து வாங்கி வரலாற்று பிழையை செய்து உள்ளார்.அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைத்து விட்டால் நமது நாட்டில் இந்து, முஸ்லிம் என பிரிவினையை உண்டாக்கி ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்திவிடலாம் என்பது தான் மோடியின் திட்டம். அதனை செயல்படுத்த தான் மோடியும், அமித்‌ஷாவும் துடிக்கிறார்கள். அதனை எதிர்த்து டெல்லியில் மார்ச் 4-ந்தேதி நடைபெற உள்ள பேரணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்.பி.ஆர், என்.ஆர்.சி. திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் என்ற பேரணி நேற்று மாலை நடைபெற்றது. திருச்சி மதுரை சாலையில் பஞ்சப்பூரில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேரணி கிராப்பட்டி போலீஸ் குடியிருப்பு அருகே நிறைவுபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.பேரணி முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன், பொதுச்ெசயலாளர், ரவிக்குமார் எம்.பி ஆகியோர் பேசினர்.

Next Story