திருச்சி அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த என்ஜினீயரிங் மாணவர்கள்


திருச்சி அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த என்ஜினீயரிங் மாணவர்கள்
x
தினத்தந்தி 23 Feb 2020 3:45 AM IST (Updated: 22 Feb 2020 8:05 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோர்ட்டு நூதன தண்டனை வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையை சுத்தம் செய்தனர்.

திருச்சி, 

திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு படித்து வரும் மாணவர்களுக்கும், இறுதியாண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்புகளால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். 

மேலும், கல்லூரி கேண்டீனில் இருந்த சோடா பாட்டில் களையும் எடுத்து வீசினர். இந்த மோதல் சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு தரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் இரு தரப்பு மாணவர்களும் தாங்கள் சமாதானமாக செல்கிறோம். எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீ‌‌ஷ்சந்திரா, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 22-ந் தேதி (நேற்று) ஒருநாள் திருச்சி அரசு மருத்துவமனையின் பொதுவார்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கி உத்தரவிட்டார். 

மேலும், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தொடர்பான உரிய ஆவணங்களை வரும் 26-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். 

அதன்படி அரசு மருத்துவமனையை சுத்தம் செய்வதற்காக 28 மாணவர்களும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். முதலில் மாணவர்களுக்கு டாக்டர் பாரதி தலைமையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்த தானம் செய்தனர்.

Next Story