நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 368 மாணவர்களுக்கு பட்டம் ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் வழங்கினார்


நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 368 மாணவர்களுக்கு பட்டம்  ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Feb 2020 4:30 AM IST (Updated: 22 Feb 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.

நெல்லை, 

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 368 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கினார்.

368 பேருக்கு பட்டம் 

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். நெல்லை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் லதா வரவேற்று பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு, 23 முதுநிலை மற்றும் 345 இளநிலை என மொத்தம் 368 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டஅறிவு 

பட்டம் பெறுகிற மாணவர்கள் தொழிலும், வாழ்க்கையிலும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். வக்கீல் தொழில், மற்ற தொழில்களை விட வேறுபட்டது ஆகும். மற்ற தொழில்கள் படிப்பை முடித்து விட்டு தொடங்கும். ஆனால் வக்கீல் தொழிலை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். சமுதாயத்தையும், அதன் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து செயல்படுகிறவர்களே வக்கீல்கள்.

உலகிலேயே ஒரு தொழிலை கற்றுக்கொள்ள கட்டணம் தருவது வக்கீல் தொழிலுக்கு மட்டுமே. வக்கீல்கள் தங்களது வாதத்தால் நீதிபதியை தன் வசப்படுத்த வேண்டும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கான வழக்கை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த தொழிலில் கடினமாக உழைப்பதுடன், தொழிலில் தர்மத்தையும் கடைபிடிக்க வேண்டும். வருங்காலத்தில் வக்கீல் தொழில் பெண்களுக்கு சிறப்பானதாக இருக்கும். வக்கீல் தொழிலில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பட்டம் பெற்றதுடன், படிப்பு முடிந்து விட்டதாக கருதாமல் தொடர்ந்து சட்ட அறிவை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் பேசுகையில் கூறியதாவது:–

சட்டக்கல்வியில் மாற்றம் 

ஒரு காலத்தில் சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெரும்பாலான பெற்றோர் தயக்கம் காட்டினர். அந்தளவுக்கு சட்டக்கல்லூரிகளின் செயல்பாடுகள் காணப்பட்டது. ஆனால் இன்றைய சட்டக்கல்வியின் நிலை மிகவும் மாறி விட்டது. தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்போது மாணவர்கள் எந்த போராட்டத்துக்கும் செல்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை தொடர்பான போராட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈடுபடவில்லை. கடந்த 2½ ஆண்டுகளில் தமிழகத்தில் 7 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதில் 5 கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

நன்மதிப்பு 

சட்டக்கல்லூரிகளில் பாடம் நடத்துவதை மேம்படுத்த 128 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 16 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும் 43 பேர் விரைவில் நியமிக்கப்படுவதற்கு உரிய அனுமதி கோரப்பட்டு உள்ளது. மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த 100 மதிப்பெண்ணில் 70 எழுத்து தேர்விலும், 30 மதிப்பெண் வருகை பதிவேடு, வாய்மொழி தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.687 கோடி உள்கட்டமைப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட மாணவர்கள் தங்களை நம்பி இருக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்மதிப்பை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பிற அரசு சட்டக்கல்லூரி முதல்வர்கள் சொக்கலிங்கம், பாலகிருஷ்ணன், துர்க்கா லட்சுமி, முன்னாள் முதல்வர்கள் ராமபிரான் ரஞ்சித், சீனிவாசன், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது, மூத்த வக்கீல் மங்களா ஜவஹர், நெல்லை வக்கீல் சங்க தலைவர் சிவசூர்யநாராயணன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Next Story