ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது


ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 10:33 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் புதிய காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் தன்ராஜ்(வயது 32). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சபரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தன்ராஜ் அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் தன்ராஜை, கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.

இதில் கை, கால், தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தன்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொலையான தன்ராஜின் மனைவி சபரிக்கு 3 சகோதரர்கள். அதில் ஒருவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், சுமன் ஆகியோர் மளிகை கடைக்கு வந்து சபரியின் சகோதரரிடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சபரியின் சகோதரர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், சுமன் இருவரும் சபரி மற்றும் அவரது சகோதரர்களை தாக்க தங்கள் கூட்டாளிகளுடன் வந்தனர். கத்தியுடன் வந்த கும்பலை பார்த்த சபரி மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.

அப்போது வெளியே இருந்த தன்ராஜை அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அஜய்(19), திலக்ராஜ்(23), விக்கி(21), பால் பிரவீன்(26), சாமுவேல்(20) மற்றும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த வினோத் (24) ஆகிய 6 பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ் மற்றும் சுமன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story