தஞ்சை மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்


தஞ்சை மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2020 12:00 AM GMT (Updated: 22 Feb 2020 7:35 PM GMT)

தஞ்சை மாதாக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாதாக்கோட்டையில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே சரக்கு வேன் மூலம் கொண்டு வரப்பட்டன. மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர்.

காளைகளை அடக்க வந்திருந்த மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். பரிசோதிக்கப்பட்ட பின்னர் வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சுழற்சி முறையில் வீரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் திமிலை பிடித்து அடக்க வீரர்கள் துணிச்சலாக சென்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் காளையை பிடித்தபோது காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிதறி ஓடினர்

ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே பிடித்தால் வீரர் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை அதன் உரிமையாளர்கள் பெற்று சென்றனர். சில காளைகள் வீரர்களை நோக்கி ஆக்ரோஷத்துடன் முட்டியது. அப்போது வீரர்கள் மாட்டின் கொம்புகளில் சிக்காமல் லாவகமாக தரையில் படுத்துக்கொண்டனர். சில காளைகள், வீரர்களை தன்னிடம் நெருங்க விடாமல் மிரட்டின. அப்போது வீரர்கள் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறிக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளை அடக்க காளையர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது. சில காளைகள் மைதானத்திற்குள் வந்ததும் நிதானமாக நின்று சுற்றும், முற்றும் பார்த்தபடி தனது கொம்புகளை ஆட்டி மாடுபிடி வீரர்களை மிரட்டின. சீற்றத்துடன் சீறிப்பாய்ந்த சில காளைகளை பார்த்து மாடுபிடி வீரர்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினர். சாதுரியமாக செயல்பட்டு காளைகளை வீரர்கள் அடக்கினர். வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சென்ற ஓரிரு காளைகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறின.

692 காளைகள்

காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரராக ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சபரி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளையர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளே அதிகம். ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது.

ஜல்லிக்கட்டிற்கு வந்திருந்த 692 காளைகளும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 330 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். காளைகள் முட்டியதில் வீரர்கள் 15 பேரும், பார்வையாளர்கள், மாட்டை பிடித்து சென்றவர்கள் 11 பேரும் என மொத்தம் 26 பேர் காயம் அடைந்தனர்.

10 பேர் மருத்துவமனையில் அனுமதி

இவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இவர்களில் பலத்த காயம் அடைந்த வீரர், பார்வையாளர்கள் என 10 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர் போட்டியை வைத்திலிங்கம் எம்.பி., தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினையும் எடுத்துக்கொண்டனர்.

இதில் முன்னாள் எம்.பி. பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டக சாலை துணைத்தலைவர் ரமே‌‌ஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகள்

போட்டிக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பிலவேந்திரன், செயலாளர் சூசைராஜ், பொருளாளர் லூர்துசாமி, ஒருங்கிணைப்பாளர் சவரிராஜ் மற்றும் மாதாக்கோட்டை கிராம பொதுமக்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் செய்திருந்தனர்.


Next Story