மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கண்காணிப்பு கேமராக்கள்


மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 23 Feb 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட பல்லவர் கால நினைவு சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இதனை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் போர்வையில் அவ்வப்போது சமூக விரோதிகளும் நுழைந்து அங்குள்ள பாரம்பரிய நினைவு சின்னங்களை சிதைப்பதும், காதலர்கள் தங்களின் பெயர்களை புராதன சின்னங்களில் எழுதிவிட்டு அலங்கோலப்படுத்திவிட்டு செல்வதும், மது குடித்து விட்டு மது பாட்டில்களை பாறையில் போட்டு உடைத்து விட்டு செல்வது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வந்தன.

இதையடுத்து சமூக விரோதிகள், சந்தேக நபர்கள், வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகளிடம் வழிப்பறி செய்யும் திருடர்களையும் எளிதில் அடையாளம் காணும் வகையிலும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் பயணிகள், பொதுமக்கள் அதிகம் திரளும் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாமல்லபுரம் போலீஸ் துறை அறிவித்திருந்தது.

மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த மாமல்லபுரம் போலீசுக்கு தமிழக காவல் துறை தலைவர் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின்பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மேற்பார்வையில் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் கோவளம் வரையிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப்பதற்காக கணினியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையும் மாமல்லபுரம் உதவி கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போன்ற இரு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை தினமும் கண்காணிப்பதற்காக தனியாக போலீசாரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு பயணிகளிடம் பாஸ்போர்ட், பணப்பை உள்ளிட்ட பொருட்களை திருடும் நபர்கள் எளிதில் பிடிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story