ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழா


ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழா
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 23 Feb 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றாங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழா நடைபெற்றது. இதில் லட்சுமி நாச்சியார் களஞ்சியம் அன்னதானம் வழங்கினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் ஆறும், கடலும் சங்கமிக்கும் மைய பகுதியில் கருப்பணசாமி, ராக்கச்சியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த பரிவார தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் மாசி களரி விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை நீண்ட காலமாக இந்த மாவட்ட மக்களால் வள்ளல் என்று அழைக்கக்கூடிய டாக்டர் இரா.களஞ்சியம் தொடர்ந்து வழங்கி வந்தார். இதுதவிர பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், சீருடைகள் போன்ற நலத்திட்ட உதவிகளும், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டும், தொழில், கல்வி, மருத்துவ உதவிகளும் செய்தும் வந்தார்.

அவரை தொடர்ந்து அவரது மூத்த மகன் பொறியாளர் வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் டாக்டர் சிவக்குமார், நடிகர் சுரேஷ் ஆகியோர் தங்களது தந்தை வழியில் தொடர்ச்சியாக பல நல்ல காரியங்களை மாவட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாசி களரி திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக 101 கிடாய்கள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் களஞ்சிய தேவரின் மனைவி லட்சுமி நாச்சியார், மகன்கள் பொறியாளர் வெங்கட்ராமன், டாக்டர் சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன், மற்றும் மருமகள் ரம்யா வெங்கட்ராமன், பேரன் பேத்திகள் ஆகியோர் சாமிக்கு உணவு படைத்து வழிபட்டனர். பின்பு அதனை வயது முதிர்ந்த ஏழைகளுக்கு வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்டமான பந்தலில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னதானம்

இந்த நிகழ்ச்சிக்கு பொறியாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அவரது தாயார் லட்சுமி நாச்சியார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் சிவக்குமார், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆற்றாங்கரை ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு களஞ்சிய தேவரின் வழியில் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, மருத்துவம், விளையாட்டு, தொழில் உள்ளிட்டவைகளுக்கு உதவி செய்து வரும் பொறியாளர் ஆர்.கே.வெங்கட்ராமனை சந்தித்து பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதேபோல அவரது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற மாசி களரி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மண்டபம் ராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராஜா, மதுரை, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஸ்டார் ரெசிடென்சி ஓட்டல்களின் மேலாளர்கள், அலுவலர்கள், வி பவர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பசும்பொன் தேவர் அறக்கட்டளை நிறுவனர் அஜய்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உறவினர் மண்டபம் நாகசாமி, குருநாதன், பாண்டியன், பூபதி, முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா, பெருங்குளம் பர்வின் குரூப் நிறுவனர் இஸ்மாயில், சேக், பெருங்குளம் மூர்த்தி, சேர்வைக்காரன் ஊருணி கணேசன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், போலீசார், அரசு அலுவலர்கள், வர்த்தக பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாசி களரி விழாவில் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆர்.கே.வெங்கட்ராமன் ஆலோசனையின்பேரில் உறவினர்கள் மண்டபம் சேகர், முரளி, சேர்வைக்காரன் ஊருணி மேகவர்ணம், மண்டபம் ரகு, உள்பட உறவினர்கள், நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் டாக்டர் களஞ்சியத்தேவர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். 

Next Story