புறப்பட்ட சிறிது நேரத்தில் ரோட்டோர கடையில் வெகுநேரம் நிறுத்தப்படும் கேரள அரசு பஸ்கள் தென்காசி, செங்கோட்டை பயணிகள் அவதி


புறப்பட்ட சிறிது நேரத்தில் ரோட்டோர கடையில் வெகுநேரம் நிறுத்தப்படும் கேரள அரசு பஸ்கள்  தென்காசி, செங்கோட்டை பயணிகள் அவதி
x
தினத்தந்தி 24 Feb 2020 4:30 AM IST (Updated: 23 Feb 2020 6:17 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டம் புளியரை பகுதி கேரள மாநிலத்தின் எல்கை ஆகும்.

தென்காசி, 

புறப்பட்ட சிறிது நேரத்தில் ரோட்டோர கடையில் கேரள அரசு பஸ்கள் வெகு நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால் தென்காசி, செங்கோட்டையில் இருந்து செல்லும் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கேரள அரசு பஸ் 

தென்காசி மாவட்டம் புளியரை பகுதி கேரள மாநிலத்தின் எல்கை ஆகும். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் பல்வேறு பணிகள் மற்றும் போக்குவரத்து, வியாபாரம் போன்ற வகைக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள வங்கிகள், கூட்டுறவு சங்கம், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அரசு பள்ளியில் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் போன்றவர்கள் தினமும் கேரள அரசு பஸ்களில் சென்று வருகிறார்கள்.

பயணிகள் அவதி 

தென்காசியில் இருந்து காலையில் செல்லும் கேரள அரசு பஸ்களில் இவர்கள் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புகிறார்கள். தென்காசியில் இருந்து காலையில் புறப்படும் கேரள பஸ்கள் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புளியரை அருகே ரோட்டோர கடையில் உணவுக்காக நிறுத்தப்படுகின்றன.

அங்கு சுமார் 20 நிமிடம் வரை பஸ்கள் நிற்கின்றன. இதனால் உரிய நேரத்தில் அலுவலகங்களுக்கோ, பணிக்கோ செல்ல முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி, செங்கோட்டை பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story