நெல்லையில் பயங்கரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக்கொலை தாய்–கள்ளக்காதலன் வெறிச்செயல்
நெல்லையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.
நெல்லை,
நெல்லையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ் (வயது 29). டேங்கர் லாரி டிரைவர். இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த தீபா (26) என்பவரும் முகநூல் (பேஸ்புக்) மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தீபா நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகன் இருந்தான். அந்தோணி பிரகாஷ், டேங்கர் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இதனால் தீபா தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபா, அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை வசூலிக்க அதே பகுதியை சேர்ந்த சொரிமுத்து (30) என்பவர் தீபா வீட்டிக்கு அடிக்கடி வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
பரிதாப சாவு
இந்த நிலையில் கடந்த 20–ந்தேதி தீபா தனது மகன் யோகேஷ் மற்றும் கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோருடன் நெல்லைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் சிறுவன் யோகேஷ், கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறி அவனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று யோகேஷ் பரிதாபமாக இறந்தான். சிறுவனின் தந்தை அந்தோணி பிரகாஷ் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடித்துக்கொலை
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீபாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தீபா, கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோர் சேர்ந்து சிறுவன் யோகேசை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. தீபாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சொரிமுத்தை தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவனை அவனது தாய், கள்ளக்காதலன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story