பாளையங்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி 2 பேர் சிக்கினர்


பாளையங்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 24 Feb 2020 4:00 AM IST (Updated: 23 Feb 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏ.டி.எம். எந்திரம் 

பாளையங்கோட்டை சாந்திநகர் மெயின்ரோட்டில் உள்ள பெல் அமோர்சஸ் காலனியில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தின் பூட்டப்பட்டு இருந்த ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் ‌ஷட்டரை கீழே இறக்கிவிட்டு விட்டு ஏ.டி.எம். ஏந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் எந்திரத்தில் பணம் இருக்கும் இடத்தை உடைத்து உள்ளனர். அப்போது கண்காணிப்பு கேமிராவையும் உடைத்தனர்.

அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் இவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகிக்கொண்டு இருந்தது. இதை மும்பையில் உள்ள அந்த தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணித்துக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் பார்த்தனர். உடனே அவர்கள் அங்கிருந்து பாளையங்கோட்டை போலீசாருக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

2 பேர் சிக்கினர் 

இந்த தகவல் கிடைத்த உடனே நெல்லை மாநகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ‌ஷட்டரை திறந்து அங்கு ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொண்டு இருந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜ்(வயது23), முத்து(23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் ஏ.டி.எம். ஏந்திரம் மற்றும் கண்காணிப்பு கேமிராவை உடைத்ததில் அந்த பொருட்கள் அங்காங்கே சிதறி கிடந்தன.

Next Story