வேப்பூர் பகுதியில், 6 மாதமாக கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கைது - பகலில் வியாபாரி போல் கிராமங்களில் நோட்டமிட்டு திருடியது அம்பலம்
வேப்பூர் பகுதியில் 6 மாதமாக கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டான். அவன் பகலில் வியாபாரி போல் கிராமங்களுக்கு சென்று நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
வேப்பூர்,
வேப்பூர், சிறுபாக்கம் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகை கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் படி திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நல்லூர் மேற்கு தெருவில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியை தேன்மொழி தனது வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம மனிதர், தேன்மொழி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.
இதில் திடுக்கிட்டு எழுந்த தேன்மொழி திருடன்... திருடன்... என அலறினார். சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் மர்ம மனிதர் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
இதனிடையே வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடி சமத்துவபுரத்தில் கொள்ளையன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இரவோடு இரவாக அங்கு விரைந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் ஐவதுகுடி சமத்துவபுரத்தில் வசித்து வந்த மாரிமுத்து மகன் சுப்பிரமணியன் (வயது 48) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தான் ஆசிரியை தேன்மொழியிடம் 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கொள்ளை கும்பலின் தலைவனாக வலம் வந்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையின் போது போலீசில் அவர் கூறியதாவது:-
நானும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், எனது மைத்துனரான சஞ்சய்காந்தி ஆகியோர் சேர்ந்து தான் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோம். கடந்த 6 மாதங்களாக வேப்பூர், சிறுபாக்கம் பகுதியில் கைவரிசை காட்டிவந்தோம்.
பகல் நேரங்களில் பாத்திரம், காய்கறிகள் விற்பனை செய்வது போன்று சரக்கு வாகனத்தில் கிராமங்களுக்கு செல்வோம். அப்போது, வீடுகளில் யார் யார் உள்ளனர்? எவ்வளவு நகை போட்டு இருக்கிறார்கள் என்பதை எல்லாம் நோட்டமிடுவோம். பின்னர் எனது தலைமையில் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி, நகையை கொள்ளையடித்து வந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து சேப்பாக்கம் செல்வி, எஸ்.நரையூர் ரவிச்சந்திரன், கீழ்ஒரத்தூர் சந்தியா, ஏ.களத்தூர் கோவிந்தராஜ், எழிலரசி, ம.கொத்தனூர் ரவிச்சந்திரன், ஆதியூர் தீபிகா உள்ளிட்ட பலரது வீடுகளில் கொள்ளையடித்ததை சுப்பிரமணியன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 84 கிராம் தங்கம், 250 கிராம் வெள்ளிப்பொருட்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் சஞ்சய்காந்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியை தேன்மொழி வீட்டில் திருட்டு நடந்த சில மணி நேரத்துக்குள் கொள்ளையனை பிடித்த இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோரை திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பாராட்டினார். வேப்பூர் பகுதியை கலக்கி வந்த கொள்ளையன் போலீசில் சிக்கி இருப்பதன் மூலம், அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story