புயலால் அழிந்த, தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.7 கோடியில் கலங்கரை விளக்கம் பணிகள் தொடங்கியது


புயலால் அழிந்த, தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.7 கோடியில் கலங்கரை விளக்கம் பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.7 கோடியில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் மீனவர்களின் வசதிக்காக தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி மத்திய மந்திரி மன்சுக்மாண்டவியா தனுஷ்கோடி வருகை தந்து புதிய கலங்கரை விளக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. அதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுமார் 5 மீட்டர் ஆழத்தில் பெரிய குழி தோண்டப்பட்டு வருகிறது. மேலும் பல உபகரணங்கள், பெரிய குழாய்கள் அங்கு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

கலங்கரை விளக்கம் அமைக்கும் பணி குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் ரூ.7 கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டப்பட உள்ளது. தற்போது கலங்கரை விளக்க பணியானது தொடங்கி உள்ளது. இன்னும் ஒரு ஆண்டில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் கலங்கரை விளக்கத்தின் மேல் கடல் எல்லையை கண்காணிக்கவும்,மீனவர்களை பாதுகாக்கவும் ரேடார் கருவியும் பொருத்தப்படும். கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு செல்லும் வகையில் லிப்ட் அமைக்கப்படும். கலங்கரை விளக்கம் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்த பின்பு தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் மேல் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் இந்த கலங்கரை விளக்கம் வழிகாட்டியாகவும், மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்கும் என்றார்.

Next Story