ரத்தினகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 3 மான்கள் வாகனம் மோதி பலி
ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 3 மான்கள் வாகனம் மோதி இறந்தன.
ஆற்காடு,
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி அருகே மலைப்பகுதி உள்ளது. மேலும் புங்கனூர் காப்புக்காடு உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் மலை பகுதிகள் மற்றும் காப்புக்காட்டில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் 2 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புள்ளி மான் மற்றும் 2 ஆண் புள்ளி மான்கள் நேற்று அதிகாலை தண்ணீர் தேடி ரத்தினகிரி வந்தன. தென்நந்தியாலம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மான்கள் கடக்க முயன்றன.
அப்போது ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் 3 மான்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 மான்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் விரைந்து சென்று இறந்த மான்களை மீட்டு ராணிப்பேட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து ரத்தினகிரி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story