ஜவ்வாது ராமசமுத்திரம் கிராமத்திற்கு பஸ் வசதி - அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்
ஜவ்வாது ராமசமுத்திரம் கிராமத்துக்கு பஸ்வசதியை அமைச்சர் நிலோபர் கபில், கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக, ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் ஊராட்சி நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜவ்வாது ராமசமுத்திரம் கிராம மக்கள் சுதந்திரம் கிடைத்து முதல் இதுவரை பஸ் வசதி இல்லை என அமைச்சர் நிலோபர் கபிலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாணியம்பாடியில் இருந்து நாராயணபுரம் வரை இயக்கப்படும் அரசு பஸ்களான 24ஏ, 10பி ஆகிய பஸ்களை நாராயணபுரத்தில் இருந்து ஜவ்வாது ராமசமுத்திரம் கிராமம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று ஜவ்வாது ராமசமுத்திரம் கிராமத்திற்கு பஸ் வசதிகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் வேலூர் மண்டல போக்குவரத்து துறை துணை மேலாளர் பொன்பாண்டி, வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பஸ் இயக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Related Tags :
Next Story