காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை


காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை
x
தினத்தந்தி 23 Feb 2020 10:45 PM GMT (Updated: 23 Feb 2020 7:49 PM GMT)

தனியார் கேக் தயாரிப்பு நிறுவனம், 2020 கிலோ எடைகொண்ட கேக்கில் அப்துல்கலாமின் உருவத்தை வரைந்து சாதனை புரிந்தது.

பூந்தமல்லி,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம், 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகும் என்றார். அதை குறிப்பிடும் வகையில் தனியார் கேக் தயாரிப்பு நிறுவனம், 2020 கிலோ எடைகொண்ட கேக்கில் அப்துல்கலாமின் உருவத்தை வரைந்து சாதனை புரிந்தது.

இந்த நிகழ்ச்சி பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது. இதற்கென 500 கிலோ மைதா, 650 கிலோ சர்க்கரை மற்றும் 16 ஆயிரம் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 30 பணியாளர்கள் தொடர்ந்து 7 மணிநேரம் பணியாற்றி 31 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான வகையில் 2020 கிலோ எடையுள்ள கேக்கில் அப்துல்கலாமின் உருவத்தை வரைந்தனர்.

அப்போது ஆசிய சாதனை புத்தகத்தின் தென்னிந்திய பிரதிநிதி விவேக் மற்றும் குழுவினர் இதனை பார்வையிட்டனர். ஆசியாவிலேயே இதுபோன்ற ஒரு மாபெரும் கேக், அதுவும் அப்துல்கலாம் உருவத்துடன் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும் என்பதை உறுதிசெய்த ஆசிய சாதனை புத்தக அதிகாரிகள், இதற்கான சான்றிதழை கேக் தயாரிப்பு நிறுவன இயக்குனர் லாரன்சிடம் வழங்கினர்.

இதில் திரட்டப்படும் நிதி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோய் பாதித்தவர்களின் மருத்துவ செலவுக்கும் அளிக்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் வரையப்பட்டு உள்ளதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Next Story