பிள்ளைகள் கண் எதிரே பரிதாபம்: குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவரும் பலி


பிள்ளைகள் கண் எதிரே பரிதாபம்: குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
x
தினத்தந்தி 24 Feb 2020 5:00 AM IST (Updated: 24 Feb 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி பலியானார். பிள்ளைகள் கண் எதிரே நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காயார் அருகே உள்ள பனங்காட்டுபாக்கம், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மனைவி சாந்தி (வயது 27). இவர்களுக்கு நித்தீஷ் (10) என்ற மகனும், ஹரிணி (8) என்ற மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவரும் புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு நித்தீஷ், ஹரிணி இருவரும் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் விரக்தி அடைந்த சாந்தி, திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் எரியும் தீயுடன் அங்கும், இங்குமாக அவர் அலறியபடி ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த தனது பிள்ளைகள் நித்தீஷ், ஹரிணி இருவரையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடிவந்து பத்திரமாக இறக்கிவிட்டார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று மனைவியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது இளங்கோவின் உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. தங்கள் பிள்ளைகளின் கண் எதிரேயே இருவரும் உடலில் எரியும் தீயுடன் வலியால் அலறினர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரது உடலிலும் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் சாந்தி, உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பலத்த தீக்காயம் அடைந்த இளங்கோவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத் தகராறில் பெற்ற பிள்ளைகளின் கண் எதிரேயே கணவன்-மனைவி இருவரும் தீயில் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் தங்களது தாய்-தந்தையை இழந்து அனாதைகளான பிள்ளைகள் இருவரும் தங்கள் பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், காயார் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story