ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது


ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2020 5:00 AM IST (Updated: 24 Feb 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒன்னக்கரை காப்புக்காடு வழியாக மர்ம நபர்கள் சிலர் செம்மரக்கட்டைகள் கடத்துவதாக நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் தீபக்பில்கிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் கிரு‌‌ஷ்ணகிரி வனச்சரகர் நாகே‌‌ஷ் தலைமையில் வனவர் துரைகண்ணு, வனக்காப்பாளர்கள் முனுசாமி, வெங்கடே‌‌ஷ் மற்றும் வனத்துறையினர் ஒன்னக்கரை காப்புக்காட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் 3 பேர் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தி வந்து கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அந்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அதில் அவர்கள் ரெட்டிப்பட்டியை சேர்ந்த சின்னகவுண்டர் (வயது 27), மாயக்கண்ணன் (24) என்பதும், ஒன்னக்கரை காப்புக்காட்டில் இருந்து செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3¾ லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே வனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய ரெட்டிப்பட்டியை சேர்ந்த வேடியப்பன் (26) என்பவர் ஊத்தங்கரை கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story