தேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா


தேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா
x
தினத்தந்தி 24 Feb 2020 4:18 AM IST (Updated: 24 Feb 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை கிராமத்தில் மாதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மற்றும் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி மாேதஸ்வரசாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதற்காக கல்லுபாளம், அகலக்கோட்டை, ஜவனசந்திரம், கும்மளதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடந்தது.

பரிசு பொருட்கள்

அப்போது மைதானத்தில் காளைகள் துள்ளிக்குதித்து சென்றன. ஆக்ரோ‌‌ஷமாக சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களையும், அலங்கார தட்டிகளையும் இளைஞர்கள் சிலர் பறிக்க முயன்றனர். அதில் சிலர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். குறிப்பிட்ட தூரத்தை விரைவில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த எருதுவிடும் விழாவை காண தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவையொட்டி தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story