வாகன நெரிசலை சமாளிக்க முக்கிய வீதிகளில் ஒருவழிப்பாதை போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்


வாகன நெரிசலை சமாளிக்க முக்கிய வீதிகளில் ஒருவழிப்பாதை போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:53 PM GMT (Updated: 23 Feb 2020 11:53 PM GMT)

வாகன நெரிசலை கட்டுப்படுத்த நகரின் சில வீதிகளை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

புதுச்சேரி,

புதுவைக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெயில், பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் இங்கு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து சுற்றுலா தலங்களை பார்வையிடுகின்றனர்.

புதுவையில் வார இறுதி நாட்களில் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதை சமாளிக்க நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் கடற்கரையையொட்டிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கணக்கெடுப்பு

இந்தநிலையில் நகர பகுதியில் சில வீதிகளை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. எந்தெந்த வீதிகளை ஒருவழிப்பாதையாக மாற்றுவது, அந்த வீதிகளில் தினமும் எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன?, எங்கிருந்து வருகின்றன? என தீவிரமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மேற்பார்வையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவிகள் 50 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் நகர பகுதியில் முக்கியமான வீதிகளில் வரும் வாகனங்கள், உள்ளூர், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள், வார நாட்களில் வரும் வாகனங்கள் குறித்தும் கணக்கிடப்பட்டு வருகிறது.

ஒருவழிப்பாதை

இன்னும் ஓரிரு நாட்கள் இந்த பணிகள் நடைபெற உள்ளன. இதில் திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் திட்டம் தயாரித்து நகரின் முக்கியமான சில வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படும் என தெரிகிறது.

Next Story