மதுரை அருகே, பெட்ரோல் ‘பங்க்’கில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் - வாள், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு


மதுரை அருகே, பெட்ரோல் ‘பங்க்’கில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் - வாள், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

மதுரை திருமங்கலம் அருகே பெட்ரோல் பங்க்கில் முகமூடி கொள்ளையர்கள் வாள், கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.

திருமங்கலம்,

மதுரை திருமங்கலம் அருகே எலியார்பத்தியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியின் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு பணிபுரியும் வினோத்குமார் (வயது22), முத்துப்பாண்டி(35), செல்வம்(37) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அதிகாலையில் 3 வாலிபர்கள் முகமூடி அணிந்து கொண்டு பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளனர். அவர்கள் கையில் கத்தி, வாள் வைத்திருந்தனர். 3 பேரும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்றனர். 3 பேரையும் எழுப்பியதோடு வாள், கத்தியைக்காட்டி பணம் எங்கே உள்ளது என்று கேட்டு மிரட்டினர். மிரண்டு போன ஊழியர்கள் கல்லாப்பெட்டியில் பணம் இருப்பதாக கூறியதும் அங்கிருந்த ரூ.6ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா டிஸ்க்கையும் உடைத்து கையோடு எடுத்துச் சென்று விட்டார்கள்.

இதுகுறித்து கூடக்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story