கூடலூரில் பனிப்பொழிவு: பூத்துக்குலுங்கும் காபி செடிகள், கோடை மழை பெய்யுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கூடலூரில் பனிப்பொழிவு: பூத்துக்குலுங்கும் காபி செடிகள், கோடை மழை பெய்யுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 4:00 AM IST (Updated: 24 Feb 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பனிப்பொழிவால் காபி செடிகள் பூத்துக்குலுங்குகிறது. கோடை மழை பெய்தால் மட்டுமே பூக்கள் காய்களாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைப்பிரதேச காய்கறிகள் விளைகிறது. மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையாக பச்சை தேயிலை அறுவடை செய்யப்பட்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடலூர் பகுதியில் தேயிலைக்கு இணையாக காபி விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. அராபிக்கா, ரொபஸ்டா என 2 வகை உள்ளது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் காபி விவசாயம் நடைபெற்று வருகிறது.

நீலகிரியில் சராசரியாக 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காபி விளைகிறது. இதனால் அன்னிய செலாவணியை ஈட்டும் வகையில் காபி விவசாயம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூத்த காபி செடிகளில் காய்கள் விளைந்தது. இதனால் காபி காய்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது காபி அறுவடை சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கு காபி செடிகள் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் காபி செடிகள் பூத்துக்குலுங்குகிறது. ஆனால் நிலத்தில் போதிய ஈரத்தன்மை இல்லாததால் பூக்கள் உதிர்ந்து விடும் அபாயம் உள்ளது. இதை தடுக்க பெரிய தோட்டங்களில் குழாய்கள் மூலம் காபி செடிகளில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஆனால் சிறு விவசாயிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் பாசன வசதி கிடையாததால் அவர்களின் தோட்டங்களில் பூத்துள்ள காபி பூக்கள் உதிரும் நிலை உள்ளது. இதனால் கோடை மழை பெய்யுமா? என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். கூடலூர் பகுதியில் கோடை மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் காபி விளைச்சல் பாதிக்கும் சூழல் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து காபி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- அறுவடை சீசன் முடிவடைந்து ரொபஸ்டா வகை காபி செடிகள் பூக்க தொடங்கி உள்ளது. சரியான பருவத்தில் பூக்கள் பூத்துள்ளது. ஆனால் கோடை மழை பெய்து நிலத்தில் போதிய ஈரத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் தற்போது பனிப்பொழிவால் பூக்கள் பூத்துள்ளது. மழை இல்லாததால் பூக்கள் காய்களாக மாறுமா என்பது சந்தேகமே. இல்லையெனில் நீர் பாசன வசதி உள்ளவர்கள் காபி தோட்டங்களில் தண்ணீர் தெளிக்கலாம். இதன் மூலம் காபி பூக்கள் உதிராமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story