கூடலூர் அருகே, குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுக்கும் தாய் யானை - மரங்களில் அமர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு


கூடலூர் அருகே, குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுக்கும் தாய் யானை - மரங்களில் அமர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே குட்டி யானையின் உடலை விட்டு தாய் யானை செல்ல மறுப்பதால் மரங்களில் அமர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குச்சுக்குன்னு பகுதியில் கடந்த 17-ந் தேதி குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது. மேலும் அதன் அருகே கண்ணீருடன் தாய் காட்டு யானை நின்றிருந்தது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ஆக்ரோ‌‌ஷம் அடைந்த தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. இதனால் வனத்துறையினர் நாலாபுறமும் சிதறி ஓடி தப்பி உயிர் பிழைத்தனர்.

7 நாட்கள் ஆகியும் குட்டியின் உடலை விட்டு செல்லாமல் தாய் யானை அப்பகுதியில் முகாமிட்டு வருகிறது. இதனால் வனத்துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் இரவு பகலாக தாய் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

நேற்று காலை 6 மணியளவில் வனச்சரகர் ராமகிரு‌‌ஷ்ணன், கால்நடை டாக்டர் டேவிட் மோகன் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆனால் வனத்துறையினரை கண்டதும் தாய் யானை குட்டியின் உடல் அருகே வந்து நின்று விடுகிறது. சில சமயங்களில் வனத்துறையினரை விரட்டுகிறது. இதனால் குட்டி யானை உடல் கிடக்கும் பகுதிக்கு வனத்துறையினர் செல்லாமல் சற்று தொலைவில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 500 மீட்டர் தொலைவில் உள்ள மரங்களில் ஏறி வனத்துறையினர் அமர்ந்து பைனாகுலர் மூலம் தாய் யானையின் நடமாட்டம், அதன் செயல்களை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியை தொடங்கினர்.

இதுகுறித்து வனச்சரகர் ராமகிரு‌‌ஷ்ணன் கூறியதாவது:-

குட்டி யானையின் உடல் கிடக்கும் பகுதியில் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சற்று தொலைவில் நின்றவாறு வனத்துறையினர் இரவு பகலாக யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஆய்வு செய்த போது குட்டி யானையின் உடல் கிடக்கும் பகுதியில் தாய் யானை நிற்பது இல்லை. சுமார் 300 மீட்டர் தொலைவில் நின்று பசுந்தழைகளை தின்று வருகிறது. இதனால் குட்டி யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் வனத்துறையினர் வருவதை அறியும் தாய் யானை விரைவாக ஓடி வந்து குட்டியின் உடல் அருகே வந்து நின்று விடுகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இதுவரை தரையில் நின்று கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 500 மீட்டர் தொலைவில் உள்ள மரங்களில் வன ஊழியர்கள் அமர்ந்து கொண்டு பைனாகுலர் மூலம் தாய் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மனிதர்கள் நடமாட்டம் இல்லை என்றால் தாய் யானை அப்பகுதியில் இருந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இருப்பினும் மரங்களில் அமர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story