கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 23 Feb 2020 10:30 PM GMT (Updated: 24 Feb 2020 12:18 AM GMT)

கோவையில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினார்கள்.

கோவை,

கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் ஆகியவை சார்பில் 3-வது ஆண்டாக கோவையை அடுத்த செட்டிப்பாளையத்தில் எல் அண்டு டி பைபாஸ் சாலையோரம் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது.

அங்கு மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் நேற்று காலை 6 மணி முதலே வரத்தொடங்கின. ஜல்லிக்கட்டில் மொத்தம் 940 காளைகள் மற்றும் 754 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தகுதி உடைய வீரர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டுதொடங்கியது. முதலில் வாடிவாசலுக்கும், சரவணம்பட்டி கரிவரதராஜபெருமாள் கோவில் காளைக்கும் பூஜை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு உறுதிமொழியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாசிக்க அதை மாடுபிடி வீரர்கள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு 1979-ம் ஆண்டுக்கு பிறகு 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி நடந்தது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கோவையில் நடக்கிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வில் கலந்த பாரம்பரியமான வீர விளையாட்டு. ஜல்லிக்கட்டுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த கோவை ஜல்லிக்கட்டு சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டைஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ், கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ்.பி.அன்பரசன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்அர்ச்சுனன், வி.சி.ஆறுக் குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி மற்றும் மாநகராட்சி தனிஅதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, துணை தலைவர் அமுல்கந்தசாமி, முன்னாள் மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராமன், நடிகர்கள் பாக்யராஜ், நிழல்கள் ரவி, மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று மடக்கி பிடித்தனர்.

ஜல்லிக்கட்டு தொடங்கிய 10 நிமிடங்களில் ஒரு காளை கொம்பினால் வீரரின் கழுத்தில் குத்தி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்களை சில காளைகள் பந்தாடி விட்டு துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மடக்க வீரர்கள் மல்லுக்கட்டினார்கள்.

காளைகளை அடக்கிய வீரர்கள் வெற்றியை கொண்டாடினர். சில காளைகள் மிகவும் ஆவேசமாக வந்ததால் வீரர்கள் தடுப்பு கம்பியின் மேல் ஏறி தப்பினார்கள். பிடிபடாத காளைகள் மற்றும் காளைகளை பிடித்த வீரர்களுக்க தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

சில காளைகளை பிடிக்க விடாமல் உரிமையாளர்கள் தடுத்தனர். அவர்களை போட்டி அமைப்பாளர்கள் எச்சரித்தனர். அதையும் மீறி சில உரிமையாளர்கள் செயல்பட்டதால் போலீசார் விரட்டினார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடந்தன. அவர்களை போலீசார் எச்சரித்து வெளியே அனுப்பினர். அதிக காளைகளை பிடித்த வீரர்கள் இறுதி சுற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டை காண வந்தவர்கள் தங்களின் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை நிறுத்த போதிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் குடிநீர், கழிப்பிடம் மற்றும் சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

போட்டிக்கான ஏற்பாடுகளை கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ்.பி.அன்பரசன், துணைத்தலைவர் சிரவை நாகராஜ், செயலாளர் மாதம்பட்டி தங்கவேலு, தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். போட்டியை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் வழிநடத்தினார். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் இன்சூரன்சு செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசுகளை வழங்கினார். அதன்படி 20 மாடுகளை பிடித்த மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் முதலிடத்தையும், 19 மாடுகளை பிடித்த திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் 2-வது இடத்தையும், 10 மாடுகளை பிடித்த மதுரையை சேர்ந்த கார்த்திக் 3-வது இடத்தையும் பிடித்தனர். முதலிடம் பிடித்தவருக்கு ஒரு கார் மற்றும் ‘தினத்தந்தி‘ சார்பில் ஒரு குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்) வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்தவருக்கு ஒரு மோட்டார் சைக்கிள், 3-வது இடம் பிடித்தவருக்கு ஒரு மொபட் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

இதுபோல் களத்தில் நின்று விளையாடி வீரர்களை கலங்கடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரின் காளை முதலிடத்தையும், அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, மதுரை அய்யம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் காளை, மதுரை அய்யனார் குளம் ராக்கம்மாள் கோவில் காளை ஆகிய 3 மாடுகளும் ஒரே புள்ளிகளை பெற்றதால் 2 மற்றும் 3-ம் பரிசுகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

முதல் பரிசாக ஒரு கார் மற்றும் ‘தினத்தந்தி’ சார்பில் ஒரு குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3-ம் பரிசாக ஒரு மொபட் ஆகியவை வழங்கப்பட்டது.

Next Story