நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் கமிஷன் கேட்கின்றனர்; குறைதீர்வு கூட்டத்தில் புகார்
வார்டு மறுவரையறை சரியாக செய்யப்படவில்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் கமிஷன் கேட்கின்றனர் என்று ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
ராணிப்பேட்டை 2-வது வார்டு பகுதியை சேர்ந்த பி.ஆர்.ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நகரில் 1,2,3 ஆகிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது. இதனை சரியான முறையில் செய்யப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொது வார்டாக இருந்த 2-வது வார்டு தற்போது தனி (பெண்கள்) வார்டாக மாறியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் ராணிப்பேட்டை நகரில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் வக்கீல் தெரு 28-வது வார்டில் உள்ளது. ஆனால் இந்த தெருவில் உள்ள வாக்காளர்கள் பெயர்கள் வேறு வார்டுகளில் இடம் பெற்றுள்ளது. எனவே அந்த வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் வக்கீல் தெரு பட்டியலில் இடம் பெற நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
அரக்கோணம் அருகே உள்ள அணைக்கட்டாபுதூர், உரியூர், கேசாவரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில், ஒளவையார் தோட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளுக்கு முறையான பில் வழங்குவதில்லை. அதிகாரிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.250 கமிஷன் கேட்கின்றனர். விவசாயிகளின் நெல்மூட்டைகளை எடுத்துக்கொள்ளாமல் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை எடுத்துக் கொள்கின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை நெல் சரியில்லை என கூறி திரும்ப எடுத்து செல்ல கூறுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
வாலாஜாவை அடுத்த எடகுப்பம் கிராமத்தை சேர்ந்த யமுனாநதி என்ற பெண் தனது 2 பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே தூங்கி கொண்டிருந்த தனது கணவர் ராதாகிருஷ்ணன் அந்த வழியாக சென்ற மணல் லாரி வீடு மற்றும் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி அவர் பலியானார். அப்போது விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும், நிவாரணம் வழங்க கோரியும், தனக்கு அரசு வேலை வழங்க கோரியும் வாலாஜா அருகே தென்கடப்பந்தாங்கலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. அங்கு வந்து பேசிய அதிகாரிகள் அனைவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது வாழ வழி இல்லாமல், வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஆற்காட்டில் கும்மடம் பாரதிதாசன் தெரு பகுதியை சேர்ந்த பெண்கள் 8 பேர் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்த மோகனசுகுமார் என்பவர் சீனாவின் உகான் நகரிலிருந்தே கொரோனா வைரஸ் பரவியுள்ளது. எனவே அங்குள்ள உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வுக்கூடம், ஆய்வுகள் மேற்கொள்ள பாதுகாப்பானதாக இல்லை. எனவே அந்த ஆய்வு கூடத்தை ஆய்வு செய்து அது பாதுகாப்பானதாக இல்லை எனில் அதை மூட வேண்டும். அனைத்து நாடுகளின் ஆய்வுக்கூடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற பதாகையுடன், துண்டு பிரசுரங்களை வினியோகித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் இங்கு கையில் பதாகையுடன் துண்டு பிரசுரம் வினியோகிக்க கூடாது என கூறி அனுப்பி வைத்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்துக்கான காசோலைகளை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் தலைமையில் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story