வேலூர் கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்


வேலூர் கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Feb 2020 4:00 AM IST (Updated: 24 Feb 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து, சிறிதுநேரம் மாணவ-மாணவிகளுடன் இணைந்து தூய்மைப்படுத்தினார்.

வேலூர், 

இந்திய ரெட்கிராஸ் சங்க நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோட்டை வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடந்தது. தொல்லியல் துறை அலுவலர் ஈஸ்வரப்பன், ரெட்கிராஸ் வேலூர்கிளை தலைவர் பர்வதம், செயலாளர் இந்தர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், வரலாற்று சிறப்பு மிக்கதாகவும், வேலூர் மாவட்டத்தின் அடையாளமாகவும் கோட்டை திகழ்ந்து வருகிறது. பழமை வாய்ந்த கோட்டையின் தொன்மை தன்மை மாறாமல், அதே சமயம் அதனை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தொல்லியல்துறையினர் கோட்டையை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இந்த கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்முடைய வீட்டை மட்டும் அல்லாமல் பொதுஇடங்களையும் அனைவரும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் கலெக்டர் கோட்டை வளாகத்தில் உள்ள மைதானத்தை மாணவ-மாணவிகளுடன் இணைந்து சிறிதுநேரம் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதில் ஆக்சீலியம் மகளிர் கல்லூரி, தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கோட்டை வளாகத்தில் காணப்பட்ட புதர்களை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

முன்னதாக பொதுஇடங்களை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் காந்திசிலை அருகே தொடங்கி கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், வேலூர் தாசில்தார் சரவணன், 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன், ரெட்கிராஸ் சங்க மேலாளர் தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story