புதுக்கோட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


புதுக்கோட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Feb 2020 6:00 AM IST (Updated: 25 Feb 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை காமராஜபுரம் 35-ம் வீதியை சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகன் சம்பத்குமார் (வயது 21). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் தினமும் வீட்டின் அருகே உள்ள தைல மரக்காட்டிற்கு சென்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் சம்பத்குமார் தனது நண்பர்களுடன் தைல மரக்காட்டிற்குள் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், சம்பத்குமாரின் நண்பர்களை அடித்து விரட்டினார்கள். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சம்பவத்குமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேலும் சம்பத்குமாரின் தலையை துண்டித்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து கணே‌‌ஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பத்குமாரை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சம்பத்குமார் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story