கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 3:05 AM IST (Updated: 25 Feb 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

கோவில் இடிக்கப்பட்ட பிரச்சினையில் வருவாய்த்துறை அதிகாரி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறி சலவை தொழிலாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தின்போது 31 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மனு அளிப்பதற்காக கம்பம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், லெனின் ஆகியோர் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தொட்டமன்துறை அருகில் சலவை தொழிலாளர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும், எனவே சலவை தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். எனவே இந்த வி‌‌ஷயத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரிடம் சலவை தொழிலாளர்கள் வழங்கினர்.

பூதிப்புரத்தை சேர்ந்த கேரளபுத்திரன் என்பவர், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எனக்கு வயது 56. நான் 9-ம் வகுப்பு படித்துள்ளேன். 1997-ம் ஆண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு மனு எழுதி வருகிறேன். கடந்த வாரம் போலீசார் இங்கு மனு எழுதக்கூடாது என்று துரத்தினார்கள். நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து வருகிறேன். எனவே என் மீது கருணை காட்டி அடுத்த 2 ஆண்டுகளுக்காவது எனக்கு அரசு அலுவலகத்தில் உதவியாளர் பணி அல்லது அரசு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

Next Story