கேகாடு-தக்கர் பாபாநகர் இடையே பாலம் இல்லாததால் பொதுமக்கள் அவதி


கேகாடு-தக்கர் பாபாநகர் இடையே பாலம் இல்லாததால் பொதுமக்கள் அவதி
x

மஞ்சூர் அருகே கேகாடு-தக்கர் பாபாநகர் சாலையில் பாலம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது தக்கர் பாபா நகர். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு எடக்காடு பஜாருக்குதான் வரவேண்டும். இதேபோல் அரசு பள்ளி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றிற்கும் எடக்காட்டிற்கு தான் வர வேண்டும்.

இதனால் பொதுமக்களின் நலன் கருதி எடக்காடு-ஊட்டி பிரதான சாலையான கேகாடு முதல் தக்கார் பாபாநகர் வரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. சாலையின் குறுக்கே பாலம் ஒன்றும் கட்டப்பட்டது. இந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமின்றி கிராமத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலை தோட்ட விவசாயிகளும் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த பலத்த மழையால் பல்வேறு மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில், கனமழையின் காரணமாக காந்தி கண்டி பகுதியில் இருந்து கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கேகாடு-தக்கர் பாபாநகர் சாலையில் பாலம் அடித்து செல்லப்பட்டது.

இதனால் இந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாலம் இல்லாததால் தக்கர் பாபாநகர் கிராமமக்கள் லாரன்ஸ், காந்தி கண்டி வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி எடக்காட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக தக்கர் பாபாநகரில் இருந்து எடக்காடு அரசு பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் கால்வாயில் இறங்கி கடந்து சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் மாணவ-மாணவிகள் கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பாலம் அடித்து செல்லப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை கிராம மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த மழையின் போது கேகாடு-தக்கர் பாபாநகர் சாலையில் உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி எடக்காட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் கால்வாயை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

மேலும் சாலை துண்டிக்கப்பட்டதால் தேயிலை தொழிலாளர்கள், விவசாயிகளும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கேகாடு-தக்கர் பாபாநகர் சாலையில் புதிதாக பாலம் கட்டித்தர உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story