தடையால் தனுஷ்கோடிக்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை


தடையால் தனுஷ்கோடிக்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2020 4:42 AM IST (Updated: 25 Feb 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் தடையால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் நடந்து சென்றுவருகின்றனர். இதையடுத்து வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் இயற்கையாகவே கடல் அலைகள் வேகமாகவும் நீரோட்டம் அதிகமாகவும் உள்ள பகுதியாகும்.தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகத்தாலும் அரிச்சல்முனை கடற்கரை சாலையில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் நடை பாதையும்,படிக்கட்டுகளும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பல இடங்களில் சேதமடைந்தன. பின்னர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடி வரும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரிச்சல்முனை வரை அனுமதிக்க காவல்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அரிச்சல்முனை சாலை வளைவுக்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே அனைத்து வாகனங்களும் போலீசாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் 1 கிலோ மீட்டருக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்படுவதால் அங்கிருந்து தினம் தினம் சுற்றுலா பயணிகளும், குழந்தைகளும், முதியவர்களும் அரிச்சல்முனை சாலை வரை நடந்து சென்று வருகின்றனர்.ஏராளமான வாகனங்கள் வருவதால் திரும்பமுடியாமலும்,வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி அடைவதுடன் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.

எனவே அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவு வரை வழக்கம்போல் சென்றுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அரிச்சல்முனை சாலை வளைவு பகுதியை ஒட்டியுள்ள சேதமான தடுப்புச் சுவர் பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் வாகனங்கள் சென்று திரும்பி வருவதால் எந்த ஒரு பாதிப்பும் வராது, போலீசார் தான் வாகனங்களை அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story