அமெரிக்க ஜனாதிபதி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
அமெரிக்க ஜனாதிபதி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தார். ஆமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அதற்கு முன்பு அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.
அதைத்தொடர்ந்து டிரம்ப், ஆக்ராவுக்கு சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்த்து மகிழ்ந்தார். பிறகு அவர் டெல்லி சென்று நேற்று இரவு தனியார் சொகுசு ஓட்டலில் தங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்பது இல்லை
இதில் பிரதமர் மோடி உள்பட மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பல்வேறு மாநிங்களின் முதல்-மந்திரிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எடியூரப்பா பட்ஜெட் தயாரிப்பு பணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து எடியூரப்பா சிவமொக்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது உண்மை தான். ஆனால் எனக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் வேலைகள் உள்ளன. அதனால் அதில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
2 நாட்களில் எந்த மாதிரியான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்பதை பார்க்கலாம். சக்திவாய்ந்த, பணக்கார நாட்டின் ஜனாதிபதி நமது நாட்டிற்கு வருவது என்பது சாதாரண விஷயமல்ல. தனிப்பட்ட முறையில் மோடியுடன் நல்ல நட்புறவு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மோடியை அவர் நம்புகிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story