சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயம் அடைந்த மேலும் 3 பேர் சாவு பலி எண்ணிக்கை 6-ஆனது


சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயம் அடைந்த மேலும் 3 பேர் சாவு பலி எண்ணிக்கை 6-ஆனது
x
தினத்தந்தி 25 Feb 2020 5:09 AM IST (Updated: 25 Feb 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று அடுத்தடுத்து இறந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கடந்த 19-ந் தேதி சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் சல்பர் மற்றும் அமோனியம் சேமித்து வைத்திருந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் அந்த அறை தரைமட்டமானது.

இந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். 6 பேர் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று வள்ளியம்மாள்(50), விஜயகுமார் (38), முத்துலட்சுமி(38) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை தரப்படுகிறது.

காயம் அடைந்த 3 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்களது உடல்கள் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story