ரவி பூஜாரியின் 97 வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைப்பு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி


ரவி பூஜாரியின் 97 வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைப்பு   கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2020 5:11 AM IST (Updated: 25 Feb 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ரவி பூஜாரி மீது பதிவான 97 வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தை சேர்ந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். செனகல் நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த ரவி பூஜாரியை, கர்நாடக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம் பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர் குமார் பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வெளிநாடுகளில் தலைமறைவு

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்து மும்பைக்கு சென்று நிழல் உலக தாதாவாக ரவி பூஜாரி மாறி இருந்தார். சோட்டா ராஜனின் கூட்டாளியாகவும் அவர் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவி பூஜாரி தலைமறைவாகி விட்டார். முதலில் நேபாள நாட்டில் ரவி பூஜாரி தலைமறைவாக இருந்தார். பின்னர் பாங்காங், உகாண்டா, புர்க்கினா பாசோ, செனகல் ஆகிய நாடுகளில் ரவி பூஜாரி தலைமறைவாக இருந்தார். இவற்றில் புர்க்கினா பாசோ நாட்டில் 12 ஆண்டுகளும், செனகல் நாட்டில் கடைசியாக 3 ஆண்டுகளும் அவர் தலைமறைவாக இருந்தார். அந்த நாடுகளில் தலைமறைவாக இருந்தாலும், தனது கூட்டாளிகள் மூலமாக கர்நாடகம், மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரியல்எஸ்டேட் அதிபர்கள், தொழில்அதிபர்கள், அரசியல் பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பதை மட்டுமே தன்னுடைய முழு தொழிலாக நடத்தி வந்திருந்தார்.

ரவி பூஜாரி மீது பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் முக்கிய நபர்களின் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரவி பூஜாரி மீது பெங்களூரு நகர போலீஸ் நிலையங்களில் 46 வழக்குகள் உள்பட மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 97 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக ரவி பூஜாரியை கைது செய்ய கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ரவி பூஜாரியை கைது செய்யவும், அவரை பற்றிய தகவல்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்தேன்.

ஒரு ஆண்டாக சிறைவாசம்

அப்போது கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி செனகல் நாட்டு போலீசார், ரவி பூஜாரியை கைது செய்திருப்பது தெரியவந்தது. அவர் மீது பிறப்பிக்கப்பட்டு இருந்த ரெட் கார்னர் நோட்டீசு காரணமாக, அந்த நாட்டு போலீசார் கைது செய்திருந்தனர். அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல்கள் உண்டானது. ஒரு ஆண்டுக்கும் மேலாக அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ரவி பூஜாரியை செனகல் நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வருவதில் இருந்த சட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவர் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

செனகல் நாட்டில் உள்ள சிறையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்திருந்தார். கடந்த 22-ந் தேதி செனகல் போலீசார், ரவி பூஜாரியை எங்களிடம் ஒப்படைத்தனர். ரவி பூஜாரியை பெங்களூருவுக்கு அழைத்து வருவதற்கு கர்நாடக அரசு, இந்திய அரசு, செனகல் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்தனர். குறிப்பாக செனகல் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதுடன், எங்களுக்கு தேவையான எல்லா விதமான உதவிகளையும் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

விசாரிக்க தனிப்படை அமைப்பு

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு போலி பாஸ்போர்ட் மூலமாக தான் ரவி பூஜாரி தப்பி இருந்தார். அவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மைசூருவை சேர்ந்தவர் என்று போலி ஆவணங்களை தயாரித்திருந்தார். தனது பெயரை அந்தோனி பெர்னான்டஸ், ராக்கி பெர்னான்டஸ் என்றும் அவர் மாற்றி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. செனகல் போலீசார், எங்களிடம் ரவி பூஜாரியை ஒப்படைத்த பின்பு அவர் எந்த பிரச்சினையும் செய்யவில்லை. விமானத்தில் வரும் போதும் முழு ஒத்துழைப்பு அளித்தார்.

ரவி பூஜாரியை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். அப்போது அவர் மீது இருக்கும் அனைத்து வழக்குகள் தொடர்பான விவரங்களும் தெரியவரும். ரவி பூஜாரி மீது ஒட்டு மொத்தமாக கர்நாடகத்தில் 97 வழக்குகள் இருப்பதால், அந்த வழக்குகள் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்படை போலீசார் ரவி பூஜாரியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரவி பூஜாரியை பெங்களூருவுக்கு அழைத்து வந்த விவகாரத்தில் எனக்கு கொடுத்த பணியை சரியாக செய்து முடித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.

Next Story