கல்விக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


கல்விக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Feb 2020 5:20 AM IST (Updated: 25 Feb 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

கல்விக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பினரும் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று புதுவையில் உள்ள அரசு கலை கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் கல்விக்கட்டணத்தை குறைக்க வழி இல்லை என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலைமறியல்

இந்தநிலையில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு கல்விக்கட்டணத்தை குறைக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழ்செல்வன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பல்கலைக் கழக கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

கலைக்கல்லூரி மாணவர்கள்

இதேபோல் பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரி, சமுதாயக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Next Story