குற்றாலத்தில் கருத்துகேட்பு கூட்டம் வார்டுகளை பிரிப்பதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்


குற்றாலத்தில் கருத்துகேட்பு கூட்டம் வார்டுகளை பிரிப்பதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்  கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 12:36 PM GMT)

குற்றாலத்தில் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தென்காசி, 

குற்றாலத்தில் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வார்டுகளை பிரிப்பதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கருத்துகேட்பு கூட்டம் 

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய விதிகளின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகரசபைகளில் அடங்கும் 153 வார்டுகள், 18 நகர பஞ்சாயத்துகளில் அடங்கும் 278 வார்டுகள், 10 பஞ்சாயத்து யூனியனில் உள்ள 1905 கிராம ஊராட்சி வார்டுகள், 144 ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. இதில் உள்ள கருத்துகள் குறித்து கடந்த 18–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

நேற்று குற்றாலம் நகர பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார்.

முறையான பட்டியல் 

கூட்டத்தில் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், வார்டுகளை பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும். உதாரணமாக 3000 வாக்காளர்கள் உள்ள வார்டை பிரித்து 400 வாக்காளர்களாக மாற்றியுள்ளனர். சாதி, மத அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டிருக்கும் இதனை சீர் செய்து முறையான பட்டியல் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Next Story