சாத்தனூர் அணை நீரை பாசன வசதிக்கு விடக்கோரி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்


சாத்தனூர் அணை நீரை பாசன வசதிக்கு விடக்கோரி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 25 Feb 2020 7:29 PM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணை நீரை சாத்தனூர் பகுதியில் பாசன வசதிக்கு விடக்கோரி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. 119 அடி உயரமுள்ள இந்த அணையை காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணை நீர் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதேபோல திருவண்ணாமலை மற்றும் 50–க்கும் மேற்பட்ட ஊர்கள் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. மேலும் 90–க்கும் மேற்பட்ட ஏரிகள் நீராதரங்களை பெற்று வருகின்றன.

சாத்தனூர் ஊராட்சியில் அணை அமைந்திருந்தாலும் எந்தவித பாசன வசதியும் இந்த கிராமத்திற்கு இல்லாமல் இருப்பது இப்பகுதி மக்களின் மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இந்த அணை தண்ணீரை சாத்தனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் பாசன வசதி பெரும் வகையில் கால்வாய் அமைத்து ஏரிகளுக்கும், அணை நீரை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மழை பொய்த்துப்போன நிலையில் வானம் பார்த்த பூமியாக இந்த பகுதி விவசாய நிலங்கள் அமைந்திருப்பதால் சாத்தனூர் அணை நீரை சாத்தனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கொண்டு வருவதன் மூலம் ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களும் விரிவடையும்.

பொதுமக்கள் பெருமளவில் பயனடைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கிராம மக்கள் சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி சாத்தனூர் அணை நீரை சாத்தனூர் பகுதியில் பாசன வசதிக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

ஆனால் எந்தவித பயனும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று சாத்தனூர் ஊர் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். 100 சதவீத கடைகளை மூடிய நிலையில் அவர்கள் பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, முரளிமோகன், செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தரடாபட்டு மனோகரன் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Next Story