பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது; 10 பவுன் மீட்பு


பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது; 10 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 10:00 PM GMT (Updated: 25 Feb 2020 2:41 PM GMT)

குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் டவுன், பரதராமி, கே.வி.குப்பம் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டுகள் சந்திரபாபு, பழனி, மோசஸ், கோவிந்தசாமி, ஜலால் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் குடியாத்தம் பகுதியில் சித்தூர்கேட், ஆர்.எஸ்.ரெயில் நிலையம் பகுதி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

குடியாத்தம் நத்தம் காலனியை சேர்ந்த நரேஷ் என்பவர் சித்தூரில் மாடு வாங்குவதற்கு ரூ.48 ஆயிரத்துடன் குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நரேசிடம் இருந்து பணப்பையை பறித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மோட்டார்சைக்கிளின் பதிவுஎண்ணை கண்டுபிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 24), அன்பழகன் (வயது 24) ஆகியோர் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த மாதம் 28–ந் தேதி கல்லப்பாடி வலசை கிராமத்தை சேர்ந்த கலாவதி என்பவரிடம் 5½ பவுன் நகையையும், கடந்த 12–ந் தேதி காங்குப்பத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் செல்வம்மாளிடம் இருந்து 5½ பவுன் நகையும், கடந்த 15–ந் தேதி வேப்பூரை சேர்ந்த மகாலட்சுமியிடம் இருந்து 1 பவுன் நகையும் பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அணைக்கட்டு பகுதியில் அடகு வைத்திருந்த 10 பவுன் நகைகளையும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story