மணிமுத்தாறு அருவி சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது மாஞ்சோலைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்
மணிமுத்தாறு அருவி சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி மாஞ்சோலைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அம்பை,
மணிமுத்தாறு அருவி சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி மாஞ்சோலைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மணிமுத்தாறு அருவி சாலை
நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவி முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்த அருவி அம்பை அருகே மணிமுத்தாறு அணை தண்ணீர் வரும் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த அருவி வழியாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கு செல்லும் சாலையும் அமைந்திருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருவிக்கு செல்லும் சாலை, அதாவது மணிமுத்தாறு அணை கரையில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் இருந்து அருவிக்கு மேலே உள்ள தலையணை வரை 6½ கிலோ மீட்டர் தூரம் வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக மழை தண்ணீரில் அரித்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மிக மோசமான நிலையில் இருந்தது. இதனால் அரசு பஸ்கள் தட்டுத்தடுமாறி மாஞ்சோலைக்கு சென்று வந்தன. இதுதவிர பிற வாகனங்கள் அருவிக்கு செல்லவும், மாஞ்சோலை பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஒருசில நேரங்களில் மட்டும், அதுவும் அரசு துறை வாகனங்கள் மட்டுமே மாஞ்சோலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது.
மனித உரிமை ஆணையம்
இதனால் மணிமுத்தாறு அருவிக்கு பொது மக்கள் குளிக்க சென்று வரமுடியவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். எளிதான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் நெல்லை வந்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன், திருச்சி கோட்ட வனத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதோடு, அருவி சாலையையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரிடம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பணியை முடிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
சாலை சீரமைப்பு
கடந்த 1–ந் தேதி முதல் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஜல்லி–மண் கலவை ரோட்டில் இருந்து பெயர்ந்து சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை தொழிலாளர்கள் சீரமைத்தனர். இந்த நிலையில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியின் போது பஸ் உள்ளிட்ட வாகனங்களை அனுமதித்தால் சாலை சேதம் அடைவதுடன், பணியும் முழுமையாக முடிக்க முடியாது. எனவே 4 நாட்களுக்கு அனைத்து வாகனங்களும் மாஞ்சோலை மலை சாலையில் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சாலை சீரமைப்பின் போது வாகனங்கள் இயக்கப்பட்டால் பணியை விரைவில் முடிக்க முடியாது. இதுகுறித்து தேயிலை தோட்ட நிர்வாகம், தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்து தயார் நிலையில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் தரமான சாலை அமைக்க ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர உதவிக்கு தடையில்லை. பொது மக்கள் அவசர உதவிக்கு அம்பை வன அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.
விரைவாக முடிக்க வேண்டும்
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.
Related Tags :
Next Story