பட்டு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு ; கலெக்டர் வழங்கினார்
பட்டு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா ஊக்கப்பரிசு வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த 3 பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.அதன்அடிப்படையில், வேம்புக்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் 1.5 ஏக்கரில் 575 முட்டைக்கூடுகள் வைத்து, 398 கிலோ பட்டுப்புழுக்கள் வளர்த்து, ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 632 லாபம் பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதேபோல் நம்மகுணம் கிராமத்தை சேர்ந்த செல்லபாண்டியன் என்பவர் 3.5 ஏக்கரில் 675 முட்டைக்கூடுகள் வைத்து, 372 கிலோ பட்டுப்புழுக்கள் வளர்த்து, ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 681 லாபம் பெற்றதற்கு 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும், கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் 4 ஏக்கரில் 525 முட்டைக்கூடுகள் வைத்து, 324 கிலோ பட்டுப்புழுக்கள் வளர்த்து, ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 567 லாபம் பெற்றதற்கு மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. இதுபோன்று நமது மாவட்டத்திலுள்ள பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அதிக அளவில் பட்டுப்புழுக்களை வளர்த்து மாநில அளவில் பரிசு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி ஆய்வாளர் மணிகண்டன், இளநிலை ஆய்வாளர் ஜோதி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story