திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், பேரூராட்சிகளில் குப்பைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கலெக்டர் ஆய்வு
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பேரூராட்சிகளில் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுவதை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை ஆகிய 3 பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வளம்மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதையொட்டி 3 பேரூராட்சிகளிலும் கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார். இதையடுத்து அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இயற்கை உரக்கூடம், மண்புழு உரக்கூடம், சாண எரிவாயு கூடம், பிளாஸ்டிக் வெட்டும் எந்திரம், துணி கழிவுகளில் கால்மிதியடி தயாரிப்பு கூடம், மீன் வளர்ப்பு கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது. அதன்பின்னரே வளம்மீட்பு பூங்காவுக்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் 16 பேரூராட்சிகளில் மண்புழு உரம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இயற்கை உரம் கிலோ ரூ.1-க்கும், மண்புழு உரம் ரூ.5-க்கும் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. மேலும் வளம்மீட்பு பூங்காவில் துர்நாற்றம் வீசாமல் தடுக்க, உரம் தயாரிப்பு கூடத்தை சுற்றிலும் முள்இல்லாத மூங்கில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் பூங்காவை அழகுபடுத்த பூச்செடிகள், காய்கறி செடிகள், பழவகை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.
இதுதவிர பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் கோழி கழிவுகள் மீன் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோழி கழிவுகள் முற்றிலும் ஒழிக்கப்படுகின்றன. உணவு கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது. மேலும் நகர்ப்பகுதியை பசுமையாக்கும் வகையில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது. அதில் இதுவரை 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story