அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம்


அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2020 10:30 PM GMT (Updated: 25 Feb 2020 7:20 PM GMT)

அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவிகளுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறைவாக இருப்பதாகவும், சத்துணவு திட்டத்திற்கான முட்டைகள் மற்றும் உணவு பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பதாகவும் சத்துணவு வினியோகத்தில் முறைகேடு நடப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் அரூர் உதவி கலெக்டர் பிரதாப் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு வழங்கப்படும் சத்துணவை பரிசோதித்தார். அப்போது சத்துணவு தரம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இதேபோல் சத்துணவுக்கான பொருட்களின் இருப்பு குறித்த பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணி இடைநீக்கம்

அப்போது சத்துணவு தொடர்பான பதிவேடுகளில் மாணவிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது உணவு பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. சத்துணவில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.

இதுதொடர்பாக பள்ளி சத்துணவு அமைப்பாளர் பிரகாசத்தை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து உதவி கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.


Next Story