குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி செஞ்சியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி செஞ்சியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 10:30 PM GMT (Updated: 25 Feb 2020 7:20 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, செஞ்சியில் முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் செஞ்சியில் ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து வட்டார ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செஞ்சி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் சையத் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். செஞ்சி வட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்தை சேர்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, தி.மு.க. மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்டக்குழு கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அரங்க ஏழுமலை, வக்கீல் மணிவண்ணன், தி.க. கோபன்னா, ம.தி.மு.க. மாநில துணை பொது செயலாளர் ஏ.கே.மணி, அ.ம.மு.க. நகர செயலாளர் மில்கா கணே‌‌ஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சிலார் பா‌ஷா, த.மு.மு.க., நிர்வாகி முஸ்தாக்தீன், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் அபுபக்கர் சித்திக், பாரூக், சரிதக்பா‌ஷா, அகமது சித்திக், குரை‌ஷி, பாட்‌ஷா உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும், இது தொடர்பாக தமிழக சட்டசபை கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அகமது சித்திக் நன்றி கூறினார்.

முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நீதராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக செஞ்சி நகரில் உள்ள முஸ்லிம்கள் வர்த்தகர்கள் தங்களது கடைகளை அடைத்தும், எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பாக 400 பெண்கள் உள்பட 1500 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story