மாமல்லபுரத்தில் தெருநாய்களால் சுற்றுலா பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மாமல்லபுரத்தில் தெருநாய்களால் சுற்றுலா பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2020 10:15 PM GMT (Updated: 25 Feb 2020 7:43 PM GMT)

மாமல்லபுரத்தில் தெருநாய்களால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து நகரம் முழுவதும் அனைத்து தெருக்கள் தோறும் பகல், இரவு நேரங்கிளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இதில் வெறி நாய்கள் அதிக அளவில் பெருத்துள்ளன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும்போது அவை அச்சுறுத்துகின்றன.

மேலும் தனியாக செல்லும் மக்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. குறிப்பாக நாய்கடியால் பதிக்கப்படும் மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரூ.1,000 மதிப்புள்ள ஊசி மருந்து 5 நபர்களுக்கு பயன்படுத்தும் நிலையில் சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது.

நாய் கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுதான் சிகிச்சை பெற முடியும்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் நாய்கடிக்கு என்று பிரத்யேக மருந்து, ஊசி கிடையாது. ஒருசில மருந்துகள் அங்கு அளிக்கப்படுகின்றன.

அதனால் அரசு ஆஸ்பத்திரிகளையே நடுத்தர வகுப்பு மக்கள் நாடவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் தெரு, டி.கே.எம். சாலை, அம்பேத்கர் தெரு, காந்தி தெரு, வேதாசலம் நகர், அண்ணா நகர், ஒத்தவாடை தெரு, திருக்குளத்தெரு, கடற்கரை சாலை தெரு, பஜனை கோவில் தெரு, ராஜீவ்காந்தி தெரு போன்ற இடங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.

அந்த வகையில் மாமல்லபுரத்திலும் எப்போதாவது ஒரு முறை நாய்களை பிடித்து சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருத்தடை செய்து மீண்டும் மாமல்லபுரம் நகரப்பகுதியிலேயே கொண்டு வந்து விட்டுவிடுகின்றனர்.

நாய்கள் பிடிக்கும்போது கடமைக்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை நாய்களே அதுவும் 50 முதல் 100 நாய்கள் மட்டுமே கருத்தடை செய்ய பிடித்து செல்லப்படுகின்றன. ஆனால் மாமல்லபுரத்தில் தற்போது சுமார் 500 தெரு நாய்கள் வரை உலா வருகின்றன.

இரவு நேரங்களில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு பயணிகளையும் தெரு நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதுவரை நாய் கடிக்கு 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கங்கை கொண்டான் மண்டபம் தெரு மற்றும் கடற்கரை சாலையில் 6 பேரை தெரு நாய்கள் கடித்து அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே தமிழக அரசும், சுற்றுலாத்துறையும் மாமல்லபுரத்தில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியிலோ அல்லது மாமல்லபுரத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் கொண்டு போய் விடவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story