பாம்பன் ரெயில் பாலத்தில் புதிய கர்டர்கள் அமைக்கும் பணி
பாம்பன் ரெயில் பாலத்தில் துருப்பிடித்த இரும்பு கர்டரை அகற்றிவிட்டு புதிய கர்டர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம்,
மண்டபத்திலிருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது, கடலுக்குள் 146 தூண்களுடன் கட்டப்பட்ட பாம்பன் ரெயில் பாலம். இந்த பாலத்தின் தூண்கள் மீது 145 இரும்பு கர்டர்கள் வைக்கப்பட்டு அதன் மீது ரெயில்வே தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடித்து சேதமான நிலையில் உள்ள இரும்பு கர்டர்களை மாற்றும் பணி நேற்று தொடங்கியது.
அதற்காக கேன்ட்ரி என்று சொல்லக்கூடிய கிரேன் மூலம் முதலில் பழைய கர்டர்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் பாம்பன் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புதிய இரும்பு கர்டர்களை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கயிறு கட்டி ரெயில் பாலத்தில் இழுத்து வந்தனர்.
தொடர்ந்து பழைய கர்டர்கள் அகற்றப்பட்ட இடத்தில் புதிய கர்டர்கள் அமைக்கப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை 4 மணிக்கு முடிந்தன. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, பாம்பன் ரெயில் பாலத்தில் மொத்தம் 27 கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உப்பு காற்றால் துருப்பிடித்த கர்டர்களை மாற்றுவதற்காக ரூ.2 கோடியே 75 லட்சம் நிதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கப்பட்டுவிட்டது.
அதைத்தொடர்ந்து ரெயில் பாலத்தில் 23 பழைய கர்டர்கள் அகற்றப்பட்டு புதிய கர்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. பாலத்தில் இன்னும் 4 கர்டர்கள் மட்டுமே மாற்றப்பட வேண்டிய நிலையில், தற்போது கடைசி நேரத்தில் ஒரு கர்டர் மட்டும் மாற்றப்பட்டது. இதையடுத்து இன்னும் 3 கர்டர்கள் அமைக்கும் பணி மீதமுள்ளது. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story